Saturday, May 30, 2009

Guys with THONTIs out there...

Came across the follwoing in one of the forum which i regulary visit...i am not the author of this essay. Here is the essay. I got this from the following link
Thanks to the original author... :) :)
தொந்தியின் பயன்கள் : ஓர் ஆய்வு கட்டுரை


- மணிப்பயல்


தமிழ் வினாத்தாள்களில் கட்டுரை வரைக என பல தலைப்புகளில் கேள்விகள் கேட்கப்பட்டு இருக்கும். இதற்கு நிறைய மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதால், இவை மாணவர்களின் தலையெழுத்தை மாற்றி விடும் அபாயம் உண்டு.

எனது நண்பன் அசோகன் மாமல்லபுரத்துச் சிற்பங்கள் பற்றி கீழ்க்கண்டவாறு கட்டுரை எழுதினான்:

மாமல்லபுரத்துச் சிற்பங்கள் மாமல்லபுரத்தில் உள்ளன.
அவை கருங்கல்லினால் ஆனவை.
உளி வைத்துச்செதுக்கப்பட்டவை.
கொத்தனாரால் கட்டப்பட்டவை என கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.

இவனது விடைத்தாளை திருத்திய ஆசிரியர் கோபத்தில் மைனஸ் நூறு மதிப்பெண்கள் போட்டுவிட்டார். இதனால், தேர்வில் தோல்வி அடைந்த அசோகன் மாமல்லபுரத்தில் உள்ள தனது மாமா வைத்திருக்கும் டீ கடையில் வேலை செய்வதாக சமீபத்தில் கேள்விப்பட்டேன்.

கோவிந்தசாமி கடல் சிங்கங்கள் பற்றிய கட்டுரையில் இப்படி எழுதியிருந்தான்:

கடல் சிங்கங்கள் கடலில் குட்டி போட்டு காட்டில் இடம்பெயர்ந்து கூட்டமாக வாழும்.

தங்கதுரை முப்பால் பற்றிய கட்டுரையில் இவ்வாறு எழுதினான்:

பால் மூன்று வகைப்படும். அவையாவன:

1. ஆட்டுப்பால்
2. மாட்டுப்பால்
3. நாய்ப்பால்.

ஆட்டுப்பால் காய்ச்ச வேண்டாம். அப்படியே சாப்பிடலாம். மாட்டுப்பால் சுட வைத்து குடிக்க வேண்டும். நாய்ப்பால் உடலுக்கு தீங்கானது. ஆடடுப்பால் குடித்தால் இறைப்பு வரும். நாய்ப்பால் குடித்தால் குறைப்பு வரும்.

இப்படியாக கட்டுரையில் கட்டுக்கதைகள் எழுதியவர்கள் பற்றி பல கட்டுரைகள் எழுதலாம்.

'காந்தி பற்றி கட்டுரை வரைக'

இப்படி ஒரு கேள்வி நான் எட்டாம் வகுப்பில் படிக்கும்போது தமிழ் ஆண்டுத்தேர்வு வினாத்தாளில் கேட்கப்பட்டிந்தது. பதற்றத்தில் காந்தி என்பதை தொந்தி என தவறாக புரிந்து கொண்டு நான் கீழ்க்கண்டவாறு எழுதித் தொலைத்து விட்டேன்.

(இதில் வேடிக்கை என்னவென்றால் என் பின்னால் அமர்ந்து தேர்வு எழுதிய எனது நண்பன் குண்டு சவுரி எனது இந்த கட்டுரையை அப்படியே காப்பி அடித்து மாட்டிக்கொண்டான்.)

தொந்தி

'காயமே இது பொய்யடா
இது வெறும் காற்றடைத்த பையடா'

இது யாரோ ஒரு சினிமா பாடலாசிரியர் எழுதிய பாடல் அல்ல. இந்த அற்புத வரிகள் ஒரு சித்தரின் சிந்தனையில் உருவானவை.

காயம் என்றால் உடல் என்று பொருள்.

பழங்கால சித்த வைத்தியர் மந்திவாயனார் தனது ஒலைச்சுவடியில் இப்படி குறிப்பிடுகிறார்:

காயத்தில் காயம் ஏற்படின்
காயத்தில் காயத்தை வைத்து கட்டு.

அதாவது,

காயத்தில் (உடலில்)
காயம் (புண்) ஏற்படின்
காயத்தில் (புண்ணில்)
காயத்தை (பெருங்காயத்தை) வைத்து கட்டு
- என்பது பொருள்.

இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த நம் உடலில் உள்ள பாகங்களில் மிகவும் அழகானது எது என்று கேட்டால் அனைவரும் உடனே சொல்வது நமது முகம் என்று. சிலர் கண்கள் என்பர்.

உண்மையிலேயே நமது மேனி அழகிற்கு மேலும் அழகு சேர்ப்பது எது தெரியுமா? நிச்சயமாக நமது தொந்திதான். ஏன் ஆச்சரியமாக இருக்கிறதா?

ஒரு பழமொழி உண்டு.

எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம் என்று.

சிரசு என்றால் தலை என்று பொருள்.

இது மிகவும் தவறான பழமொழியாகும்.

உண்மை என்னவெனில்,

எண்சான் உடம்பிற்கு தொந்தியே பிரதானமாகும்.

இதனை ஒரு சிறிய ஆய்வின் மூலம் நீங்கள் அறியலாம்.

1. ஓர் அறையில் சுவரின் முன்னால் நிற்கவும்

2. முதலில் நீங்கள் நேராக நிற்கவும்.

3. கண்ணை மூடிக்கொள்ளவும்.

4. அப்படியே மெதுவாக நடந்து செல்லவும்.

5. சிறிது தூரம் நடந்து சென்றவுடன் சுவரில் மோதி நிற்பீர்கள்.

6. அப்படியே மெதுவாக கண்களை திறந்து பார்க்கவும்.

7. உங்கள் உடலின் எந்த பாகம் சுவரில் மோதி நிற்கிறது?

நிச்சமாக தொந்தியாகத்தான் இருக்கும்.

நமது கடவுள்களில் மிகவும் அழகானவர் தொந்தியுடைய பிள்ளையார்தான். நமது நாடு மட்டுமல்ல; வெளிநாட்டினரின் மனதை கொள்ளை கொண்டதும் பிள்ளையாரின் உருவம்தான். அதனாலேயே பல பிள்ளையார் சிலைகள் கொள்ளை அடிக்கப்பட்டு வெளிநாடுகளில் விற்கப்படுகின்றன. காரணம், அவரது அழகான தொந்தி.

பந்திக்கு முந்திக்கொள்
தொந்தியை வளர்த்துக்கொள்.

பந்தியில்
குந்தி தின்றால்
தொந்தி வளரும்.

போன்ற பழமொழிகள் நமது முன்னோர்கள் தொந்திக்கு கொடுத்த முக்கியத்துவத்தை பறைசாற்றும்.

தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:

1. கீழே குப்புற விழுந்தால் முகத்தில் அடிபட்டு மூக்கு உடையாமல் நம்மை காப்பாற்றுகிறது.

2. சமுதாயத்தில் ஒரு மரியாதையை ஏற்படுத்துகிறது. உதாரணமாக பெரிய பெரிய தொந்திகளை கொண்ட போலீசாரை கண்டால் நமக்கு மரியாதை கலந்த பயம் ஏற்படும்.

3. சிறந்த பொழுதுபோக்கு சாதனமாக பயன்படுகிறது. உதாரணமாக வேலையில்லாமல் சும்மா அமர்ந்திருக்கும் சமயத்தில் தொந்தியை மெதுவாக வருடிக்கொடுத்துக் கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது.

4. மல்லாக்க படுத்து இருந்தால் குழந்தைகள் சறுக்கு விளையாட்டு விளையாட மிகவும் பயன்படும். மேலும் நமது செல்லப் பிராணிகளான பூனைகள் மற்றும் நாய்க்குட்டிகள் படுத்து உறங்குவதற்கு மிகவும் விரும்புவது குஷன் வசதி கொண்ட தொந்திகளையே.

பாடலாசிரியர் வைரமுத்து கூட,

நீ காற்று நான் மரம்…
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்

என்று எழுதிய பாடலில் கீழ்க்கண்டவாறு சில வரிகளை சேர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

நீ பந்தி
நான் தொந்தி
என்ன போட்டாலும் உள்வாங்கிக்கொள்வேன்.

அரசியல்வாதிகளில் பலர் தொந்தியுடன் இருப்பதை நீங்கள் காணலாம். ஏனெனில் ஒருவரது தொந்தியின் அளவிற்கேற்ப அவரது புகழும் வளரும்.

தொந்தியார் குறைந்தால் தொண்டர் குறைவர்.
தொகுதி வளர்க்கும் உபாயம் அறிந்தே
தொந்தி வளர்த்தேன். தொகுதி வளர்த்தேனே.

என்பதே பல அரசியல்வாதிகளின் வேதவாக்கு.

தொந்தி ஏன் சதுரமாக அல்லது செவ்வகமாக இல்லாமல் உருண்டை வடிவத்தில் இருக்கிறது? என்ற வினா பலரது மனதில் எழும்.

தொந்தியானது தத்துவத்தின் சின்னமாகும்.

இந்த உலகமானது தொந்தியைப் போலவே உருண்டை வடிவமானது. இந்த வாழ்க்கையும் வட்ட வடிவமானது. இதை மனிதனுக்கு உணர்த்துவதற்காகவே இயற்கையானது மனிதனின் தொந்தியை உருண்டை வடிவத்தில் படைத்துள்ளது.

ஏழை ஒருநாள் பணக்காரன் ஆவான். பணக்காரன் ஒருநாள் ஏழை ஆவான். இதனை உணர்த்துவதற்காகவே தொந்தியானது அந்த நிலவைப் போல அடிக்கடி தேய்ந்து வளருகிறது.

இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த தொந்தியை நாம்,

போற்றி வளர்ப்போம்! கண்டதையும் போட்டு வளர்ப்போம்!!

ஜெய் தொந்தி!

No comments:

Post a Comment