நல்லவனையும் கெட்டவனையும் அளக்க,
யாரேனும் ஓர் உபகரணம்
அறிந்து வைத்திருக்கிறார்களா?
தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன்.
அதுவரை - நான், என் அளவுகோலைக் கொண்டு,
அளந்ததைச் சொல்லுகிறேன்.
நக்கலையும் நையாண்டியையும்
ஆண்டுகள் பல அலுக்காமல் கேட்டால்,
நீங்கள் நல்லவர்.
பொறுமை இழந்து பொறுமலைக்
காட்டினால், நீங்கள் கெட்டவர்.
பத்துலட்சத்தை விட்டுக்கொடுத்தால்
நீங்கள் நல்லவர்.
உரிமையான ஒன்றிரண்டு ஆயிரத்தைக்
கண்ணியமாய்க் கேட்டால்நீங்கள் கெட்டவர்.
சிலாகித்துக் கொண்டே இருந்தால்
நீங்கள் நல்லவர்
சிந்திக்கத் தொடங்கினால்
நீங்கள் கெட்டவர்.
ஏமாந்து கொண்டே இருந்தால்
நீங்கள் நல்லவர்
ஏன்? எப்படி என்று கேட்டால்
நீங்கள் கெட்டவர்!
நமக்குள்ளே
நல்லவரும் இல்லை கெட்டவரும் இல்லை.
எதிராளியின் எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்,
ஆக்குகிறது நம்மை,
நல்லவராகவும் கெட்டவராகவும்.
ஆகவே, அச்சம் கொள்ளாதீர்கள்.
எதிராளி, நல்லவரானால்
நாமும் நல்லவரே.
நம்மை,அணுகுபவர் கெட்டவரானால்
நாமும் கெட்டவரே!
No comments:
Post a Comment